கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20 வீதமானோர் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் 226 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதன் ஊடக பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார்.
அவஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தொழில் வாய்ப்புகளுக்காக அவர்கள் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையானது இலங்கை மின்சார சபையின் மொத்த பொறியியலாளர்களில் 20 சதவீதமாகும்.
அவர்களில் 85 சதவீதமானோர் மின்சார பொறியியலாளர்களாவர்.
அத்துடன் 8 சதவீதமானோர் இயந்திர பொறியியலாளர்கள் என்றும் 7 சதவீதமானோர் சிவில் பொறியியலாளர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதேவளை மின்சார பாவணையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக கூறுகையில், உள்ளக பொறியியலாளர்கள் ஏற்கனவே உள்ள நிலையில், 60 புதிய பொறியியலாளர்களை நியமிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றஞ் சாட்டியுள்ளார்.
இந்த புதிய ஆட்சேர்ப்பானது, ஆட்சேர்ப்பு நடைமுறையை மீறும் செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.