புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் திங்கட்கிழமை (04) அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான யோசனையை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்தார்.
பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை நிறுவுதல் மற்றும் மீளாய்வு செய்வதற்காக 2012 ஆம் ஆண்டு எல்லை நிர்ணயக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவின் ஒருசில விதந்துரைகள் மாத்திரம் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பின்னர் 2021 ஆம் ஆண்டில் மீண்டும் எல்லை நிர்ணயக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவின் விதந்துரைகள் தொடர்பாக இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
குறித்த குழுவின் அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அந்தந்தப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு சமர்ப்பித்து குறித்த குழுக்களின் விதந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அவ்விதந்துரைகளை மீளாய்வு செய்து விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை நியமிக்க அங்கிகாரம் வழங்கியுள்ளது.