இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அவ்வியக்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கடந்த 29ஆம் திகதி கொழும்பில் கூடி, பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தை நிறுவினர். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இனப்படுகொலைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் எந்த தீர்க்கமான வழியிலும் செயல்பட முடியாத நிலையில், அவர்கள் அவ்வாறு செய்ய உந்துதல் பெற்றனர்.
பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம், பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் அவர்களின் இருப்பின் அச்சுறுத்தலில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது. 2023 அக்டோபர் 7ஆம் திகதிமுதல், இஸ்ரேலிய அரசாங்கமும் இராணுவமும் காசா பகுதியில் ஒரு இனப்படுகொலை கலாசாரத்தை தொடங்கியுள்ளதுடன், பொதுமக்களைக் கொன்று, முற்றுகைகள் மூலம் பட்டினியை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் 18,000 குழந்தைகள் உட்பட 60,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், மேலும் வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அழிக்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர், மேலும் பாலியல் வன்முறை பற்றிய பரவலான தகவல்கள் உள்ளன. உதவிகள் மீதான இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் பஞ்சம், பட்டினியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இறப்புக்கு வழிவகுத்தன.
இந்த இனப்படுகொலையின் தோற்றம் 1947-48 ஆம் ஆண்டு நக்பாவில் தொடங்கியது, அப்போது சியோனிசப் படைகள் நிலத்தைக் கைப்பற்றுவதற்காக 750,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை படுகொலை செய்து அவர்களை விரட்டியடித்தனர். அடக்குமுறைகள் மூலம் பாலஸ்தீன மக்களை விரட்டுதல்,சட்டவிராேத குடியேற்றங்கள் மற்றும் ஒப்பந்தங்களை மீறுதல். பாலஸ்தீனியர்களின் உரிமைகளை படிப்படியாக அழித்து விடுதல் போன்றன இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையாகும். காசா பகுதியில் மேற்கொள்ளும் அழிவின் நோக்கம், பாலஸ்தீன மக்களை விரட்டுதல், இஸ்ரேலிய கூடியேற்றங்களுக்காக அந்த பிரதேசத்தை பாதுகாப்பதற்காகும் என்பது தெளிவாகிறது.
மக்களைத் திரட்டுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முன்னர் அதில் இணையுமாறு பிற தனிநபர்கள், கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மதகுருமார்களை பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் அழைக்கிறது.
இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவும், சியோனிச இனப்படுகொலையைக் கண்டிக்கவும், கிழக்கு மத்தியதரைக் கடலில் நீடித்த அமைதியை உறுதி செய்வதற்கான ஒரு படியாக இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும் பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது.