Date:

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை – அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை – அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு – நினைவுரையில் ரவூப் ஹக்கீம்.

 

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

 

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் ஒரு போதும் வட, கிழக்கு இணைப்பில்லை என மறைந்த அபூர்வ ஆளுமை இரா.சம்பந்தன் ஐயா தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் என ரவூப் ஹக்கீம் நேற்று (25) இடம்பெற்ற ஆர்.சம்பந்தன், மாலினி பொன்சேகா, லக்கி ஜெயவர்தன ஆகியோர் பற்றிய அனுதாபப்பிரேரணையில் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) மறைந்த அண்ணன் ஆர் .சம்பந்தன் பற்றிய அனுதாபப்பிரேரணையில் தொடந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம், கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் பாராளுமன்றத்தில் நாங்கள் மிக அபூர்வமாக காண்கின்ற ஆளுமை என்று சொன்னால் அது மிகையாகாது.

 

சம்பந்தனுடைய அரசியல் வெவ்வேறு யுகங்களாகப் பிரித்து ஆராயப்பட வேண்டும். அவருடைய சரிதை எழுதப்படுகின்ற போது அந்தந்த யுகங்களில் தமிழ் சமூகத்தின் விடுதலைக்கான அவருடைய பங்களிப்பை நாம் நிறையவே பேசலாம்.

 

உண்மையில் தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற அடிப்படையில் தமிழ் விடுதலைக்கட்சிகளை ஒன்றிணத்து தமிழர் விடுதலைப்போராட்டத்திற்கான ஜனநாயகப் போராட்டத்தை பாராளுமன்றத்தினூடாக செய்வதற்காக முதல் முறையில் அவர் 1977ம் ஆண்டு தந்தை செல்வாவுடைய மரணத்திற்கு பின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் அமிர்தலிங்கத்தின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு வந்தார்.

 

1983ம் ஆண்டு கலவரத்திற்குப்பிற்பாடு தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் இச்சபையிலிருந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்த பின்னணியில், அவரும் இராஜினாமா செய்து தமிழகம் சென்றார்.

 

தமிழகத்திலிருந்து கொண்டு அகதியாக தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக அவர் முன்னெடுத்த போராட்டம், அப்போராட்டத்தில் மும்மூர்த்திகளாக அண்ணன் அமிர்தலிங்கம், அண்ணன் சிவசிதம்பரம், அண்ணன் சம்பந்தன் ஆகியோர் இருந்தார்கள்.மேலும், தமிழர் விடுதலைக்கான நீண்ட போராட்டத்தில் இந்திய அரசோடு நீண்ட பேச்சுவார்த்ததைகளிலும் ஈடுபட்டனர்.

 

இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி உட்பட இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு காரணமாக அமைந்த மிக முக்கியமான அரசியல் தலைமை எங்களுக்கு மத்தியில் இன்றில்லை என்பதையும் அந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது, இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்ற விவகாரத்தை தன்னுடைய பிற்காலத்தில் மிகத்தெளிவாக உணர்ந்து கொண்டு வடகிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் ஒரு பொழுதும் நடைபெற்று விடக்கூடாதென்பதில் மிக கரிசனையோடு செயற்பட்ட ஒருவராகவும்,பகிரங்கமாக தன்னுடைய அரசியல் நிலைப்பாடாக அதனை அவர் கூறி வந்தார். அதையிட்டு அவருக்கு நாங்கள் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.

 

அண்ணன் சம்பந்தனைப்பற்றி நீண்டநேரமாக நாங்கள் பேசலாம். அவருடைய அரசியலில் இன்னுமொரு சவாலுக்குரிய சந்தர்ப்பமாக 2000ம் ஆண்டுக்கு பிற்பாடு அமைந்தது.

 

விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை இடம்பெற்ற போது, அப்பேச்சுவார்த்தை சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகளின் தயார்படுத்தலின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உதயமானது.

 

வெவ்வேறாகப்பிரிந்து நின்ற அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து 22 பேரைக்கொண்ட பெரியதொரு பாராளுமன்றக்குழுவாக ஒரு பாரிய அரசியல் பிரதிநிதித்துவம் பெற்ற அமைப்பாக மிக முக்கியமான பங்களிப்பை நல்கினார்கள்.

 

விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் அரச தரப்பு பேச்சுவார்த்தைக்குழுவில் நான் அரச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம்களின் சார்பில் நோர்வே ஏற்பாட்டாளர்களோடு கலந்து கொண்டேன்.

 

அப்பேச்சுவார்த்தைகளின் போது அடிக்கடி அண்ணன் சம்பந்தனோடு கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. அவரோடு ஒவ்வொரு பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக ஒன்றாக நான் கடமையாற்றி இருக்கிறேன்,

 

அச்சந்தர்ப்பத்தில், தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக்காண்கின்ற விடயத்திலும் இன்னும் தீர்வு காணப்பட்டிருக்கின்ற பல பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நாங்கள் அடிக்கடி எங்களுக்குள்ளே அளவளவியிள்ளோம்,

 

எப்படி சுமுகமாக இப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது என்பது சம்பந்தமான பல பிரச்சினைகளில் அவரோடு நான் கழித்த அந்த இனிய நினைவுகளைப்பற்றி மீண்டும் நான் இங்கு நினைவுகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

 

தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக எப்படிச்செயற்பட்டார் என்பது பற்றி நிறையப்பேசலாம். தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இன்றியமையாத ஒரு வகிபாகத்தை அண்ணன் இரா.சம்பந்தன் வகித்தார்

 

அவரின் ஆத்மா சாந்தியடையப்பிரார்திக்கின்ற அதேவேளை, தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் இன்றியமையாத ஒரு வகிபாகத்தை அண்ணன் இரா.சம்பந்தன் வகித்தார் என்பதை நான் சான்று பகிர்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளம்பிட்டியவில் வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு

வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு...

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும்...

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.