பேருவளை நகர சபையின் தலைவர் தேர்ந்தெடுப்பு வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) இணைந்து செயல்பட்டது குறித்து இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அமைச்சர் பதிலளிக்கையில், பேருவளை பிரதேச சபை நிறுவப்பட்டபோது 43 உறுப்பினர்களில் 10 பேர் மட்டுமே இருந்தபோதும் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தைப் பெற்றதைச் சுட்டிக்காட்டினார்.
அதே நடைமுறையைப் பின்பற்றி, பேருவளை நகர சபையில் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டதாக அவர் விளக்கினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“பேருவளை நகர சபையில் எமது மூன்று பேர் இருக்கிறார்கள். எங்களில் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டது. எனவே அவர்களில் ஒரு பகுதியினர் எங்களுக்கு வாக்களித்தனர். ஒருவேளை அவர்கள் வாக்களிக்கவில்லை என்றால், மற்ற தரப்பினர் எங்களுக்கு வாக்களித்திருக்கலாம். பிரதேச சபையில் 43 பேரில் 10 பேரை வைத்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி செய்ததைதான் நாங்களும் செய்தோம்…”
நேற்று (14) மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற பேருவளை நகர சபையின் ஆரம்பக் கூட்டத்தில், நீதிமன்ற உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டிருந்த தலைவர் தேர்தல் திறந்த வாக்கெடுப்பாக நடத்தப்பட்டது.
இதில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உப தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டது.
16 உறுப்பினர்கள் கொண்ட பேருவளை நகர சபையில், ஐக்கிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்களையும், மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 7 ஆசனங்களையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.