நேற்றைய தினம்(12) யாழ் போதனா வைத்தியசாலைக்கு கௌரவ சுகாதார அமைச்சர் Dr. நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மீன்பிடி துறை அமைச்சர் சந்திரசேகரன், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ பவானந்தராஜா, இளங்குமரன் மற்றும் ரஜீவன் ஆகியோர் இணைந்து விஜயம் செய்தனர்.
வைத்தியசாலையில் வரவேற்கப்பட்ட அமைச்சர் குழுவினர் வைத்தியசாலையின் பல்வேறு சேவை பிரிவுகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அங்கு கடமையில் இருந்த வைத்திய நிபுணர்கள் மற்றும் பிற உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி, வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்கால சேவை விரிவாக்கத்திற்கான தேவைகள் குறித்து தெரிந்து கொண்டனர்.
இறுதியில், வைத்தியசாலை உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. இதில், பல்வேறு பிரிவுகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கான கோரிக்கைகள் அமைச்சர் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
அமைச்சர் உரையாற்றிய போது, வைத்தியசாலையின் சேவையை பாராட்டியதோடு, வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நீக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
புதிதாக அமைக்கப்பட வேண்டிய கட்டிட தொகுதிக்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
மேலும் வைத்தியசாலை அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான நிதியை எதிர்வரும் காலங்களில் ஒதுக்குவதாகவும் உறுதியளித்தார்.
மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதார உதவியாளர்களை நியமிக்கும் பணிகளும் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் கூறினார்.
இத்துடன், நாட்டின் ஜனாதிபதி அவர்களும் விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்வார் என அமைச்சர் குறிப்பிட்டார்.