இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் தசுன் சானகவை 6-வது இடத்தில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்தார்.
இருப்பினும், அவரது இடம் தேவைக்கு ஏற்ப மாறுபடலாம் என்றும் அவர் கூறினார்.
நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தத் தகவல்களை அவர் பகிர்ந்தார்.
“தசுன் சானகவுக்கு அதிக ஓவர்கள் விளையாட வாய்ப்பு வழங்கப்படும். அவர் எங்கள் அணியின் முதன்மை பவர் ஹிட்டர்,” என்று சரித் கூறினார்.
மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம்பெற்றுள்ள சாமிக்க கருணாரத்னவுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் 7-வது இடத்தில் களமிறங்குவார் என்று அவர் தெரிவித்தார்.
தசுன் சானக இறுதியாக 2024 ஜூலையில் இந்தியாவுக்கு எதிராக T20 போட்டியில் விளையாடியிருந்தார், அதேவேளை சாமிக்க கருணாரத்ன 2023 ஏப்ரலில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய பின்னர் இதுவரை T20 போட்டிகளில் பங்கேற்கவில்லை.
அவிஷ்க பெர்னாண்டோவை 4-வது இடத்தில் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சரித் குறிப்பிட்டார்.
“அவிஷ்கவின் பங்கு இப்போது வேறுபட்டது. அவர் ஒருநாள் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இருந்தபோதிலும், டி20 போட்டிகளில் அவரை 4வது இடத்தில் பயன்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
தினேஷ் சந்திமால், ஒரு வருடத்திற்கு மேலாக இலங்கை T20 அணியில் உள்ளார் என்றும், அவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவோ அல்லது 3-வது இடத்தில் மாற்று வீரராகவோ பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சரித் தெரிவித்தார்.
4-வது இடத்தில் அவிஷ்க அல்லது கமிந்து மெண்டிஸ் விளையாடுவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த T20 தொடரின் முதல் போட்டி இன்று (10) இரவு 7 மணிக்கு கண்டியிலுள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்களாதேஷை வீழ்த்திய நம்பிக்கையுடன் இந்தப் போட்டித் தொடரை எதிர்க்கொள்கிறது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இதுவரை 5 T20 தொடர்கள் நடைபெற்றுள்ளன, இதில் இலங்கை 4 தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொடர் மட்டும் வெற்றி-தோல்வி இன்றி முடிந்துள்ளது.