சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும் இலங்கை அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை இலங்கை அதிகாரிகளால் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று கூறும் நாணய நிதியம், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் கலந்துரையாடலுக்கு பின்னர், துணை முகாமைத்துவப் பணிப்பாளரும் தற்காலிக தலைவருமான கென்ஜி ஒகமுரா வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“விரிவான கடன் வசதி திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல் மற்றும் IMF இன் VIII ஆம் பிரிவின் 5 ஆம் உட்பிரிவின் கீழ் கடமைகளை மீறியமை ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டன.
விரிவான கடன் வசதி திட்டத்தின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மறுஆய்வுகளின் போது செலுத்தப்படாத செலவுகள் தொடர்பாக அதிகாரிகளால் வழங்கப்பட்ட தவறான தகவல்களின் விளைவாக ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல் நடைபெற்றது.
IMF இற்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை வேண்டுமென்றே நடைபெறவில்லை. இதற்கு காரணம், நிதி அமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களால் செலுத்தப்படாத தொகைகள் குறித்து உரிய நேரத்தில் அறிக்கையிடப்படாத பலவீனங்கள் மற்றும் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ‘செலுத்தப்படாத தொகைகள்’ என்பதன் வரையறை தொடர்பாக அதிகாரிகளின் தவறான புரிதல் ஆகும்.
அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திருத்த நடவடிக்கைகள், அதாவது, செலுத்தப்படாத தொகைகளை தற்போதைய நிதி கட்டமைப்பிற்குள் திருப்பிச் செலுத்துதல், மற்றும் எதிர்காலத்தில் செலுத்தப்படாத தொகைகள் குவிவதையோ அல்லது தவறான தகவல்கள் அறிக்கையிடப்படுவதையோ தவிர்க்க, புதிய பொது நிதி முகாமைத்துவச் சட்டத்திற்கு இணங்க பொது நிதி முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பு ஆகியவை நிர்வாகக் குழுவால் நேர்மறையாக பரிசீலிக்கப்பட்டன.
இதன்படி, ஒப்பந்தங்களுக்கு இணங்காத கொள்முதல்களுக்கு காரணமான அளவு செயல்திறன் அளவுகோல்களை பின்பற்றாதமைக்கு விலக்கு அளிக்க நிர்வாகக் குழு ஒப்புக்கொண்டது, மேலும் VIII ஆம் பிரிவின் 5 ஆம் உட்பிரிவின் கீழ் கடமைகளை மீறியமை தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படாது என தீர்மானிக்கப்பட்டது,” என ஒகமுராவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.