நாடாளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று(22) ஆரம்பமானது.
அனைத்து பாடசாலைகளிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, 16 ஆம் திகதி, ஐப்பசி மாதம், 2001 ஆம் ஆண்டு முதல் 15 ஆம் திகதி, ஐப்பசி மாதம் 2003 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிறந்த பாடசாலை செல்லாத மற்றும் பாடசாலையில் இருந்து இடைவிலகிய மன்னாரைச் சேர்ந்தோருக்கான பைஸர் முதலாவது தடுப்பு மருந்தேற்றலானது நாளை காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை முருங்கனில் அமைந்துள்ள நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
பொருத்தமானவர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழுடன் வருகை தந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளில் கல்வி கற்கின்ற நிரந்தர வதிவிடதாரிகளும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மேலும் கடந்த புரட்டாசி மாதம் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சைனோபாம் முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசியானது 25 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும், 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று நானாட்டான் டிலாசாலே கல்லூரியிலும் காலை 8 மணி முதல் நண்பகல் 1 வரை வழங்கப்படவுள்ளது.
அதேநேரம் 18 – 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு ‘பைஸர்’ தடுப்பூசி ஏற்றும் பணிகள் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1,676 மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 11 பாடசாலைகளைச் சேர்ந்த மேற்படி மாணவர்களுக்கு கொட்டகலை மற்றும் தலவாக்கலை தேசிய பாடசாலைகளில் தடுப்பூசி செலுத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய சில சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் பாடசாலை மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதற்கிடையில், கொவிட் தடுப்பு செயலணியின் முக்கிய கூட்டம் ஒன்று தற்போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதன்போது புதிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தடுப்பூசி வழங்கலை 12 வயதுக்கு மேல் விஸ்தரிப்பது குறித்தும் இன்றையக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Date:
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு
