அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் ஒன்று, இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஐ.அன்ஸாரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், பள்ளிவாசல்களில் கூட்டு செயற்பாடான ஜும்ஆத் தொழுகையினை மாத்திரம் நடாத்துவதற்கு கட்டாய நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலங்கை வக்பு சபையானது அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த அனுமதியானது ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பள்ளிவாசலிலும் இதற்காக எல்லா நேரத்திலும் கலந்து கொள்ளக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
தொழுகையின் ஒரே ஒரு அமர்வு மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு வரிசை இடைவெளி விட்டு தொழுகைகள் நடாத்தப்பட வேண்டும்.
முகக்கவசம் அணிதல், 1 மீற்றர் இடைவெளி பேணல், சொந்தமான தொழுகை விரிப்பினை எடுத்து வருதல் மற்றும் வீட்டிலிருந்து வுழூ செய்துகொண்டு வருதல் என்பன கட்டாயமானதாகும்.
சுகாதார அல்லது பாதுகாப்பு தரப்பினரின் ஏனைய அனைத்து விதிமுறைகள், வழிகாட்டல்கள் மற்றும் வக்பு சபையின் முன்னைய வழிகாட்டுதல்கள் மிகவும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.
அதேவேளை வேறு எந்த கூட்டு வணக்க வழிபாடுகள் அல்லது செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
Date:
ஜும்ஆத் தொழுகைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
