வொஷிங்டன் டி.சி.யில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் (USTR) இலங்கை அரசாங்கம் நடத்திய இணக்கமான பேச்சுவார்த்தைகள் குறித்து ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடுநிலையான மற்றும் நியாயமான வர்த்தக உறவுகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளித்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தூதரக குழுவினருக்கு JAAF தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இலங்கையின் ஆடைத் தொழிற்துறைக்கு மிகவும் முக்கியமான மற்றும் நீண்டகால வணிக கூட்டாளியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தத் தொழிற்துறை நேரடியாக 350,000 பேருக்கும், நாடு முழுவதும் மேலும் 700,000 பேரின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவாக உள்ளது. எனவே, தற்போதுள்ள வர்த்தக சுங்க வரிகளை நீக்குவதற்கும், சர்வதேச வணிக சந்தையில் இலங்கையின் உற்பத்திப் பொருட்களின் போட்டித்திறனை பராமரிப்பதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை JAAF பாராட்டுகிறது.
எந்தவொரு புதிய சுங்க வரி ஒப்பந்தத்தின் மூலமும், ஆடை உற்பத்தி செய்யும் பிற நாடுகளுக்கு வழங்கப்படும் வர்த்தக சலுகைகள் இலங்கைக்கும் வழங்கப்பட வேண்டும் என JAAF எதிர்பார்க்கிறது. இது தொடர்பாக, தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மற்றும் நெறிமுறை உற்பத்தி நடைமுறைகளுக்காக உலகளவில் பெயர் பெற்ற இலங்கையின் ஆடைத் தொழிற்துறையின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் வெற்றியை கருத்தில் கொள்ளுமாறு JAAF இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறது.
இருதரப்பு வணிக ஒப்பந்தத்தை நோக்கி வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் போது, இலங்கையின் ஆடைத் தொழிற்துறை உற்பத்தி செயல்முறையின் ஒவ்வொரு படியையும் கண்காணிக்கும் திறன் (traceability), வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மைக்கான சர்வதேச தரங்களை பின்பற்றுகிறது என JAAF மீண்டும் வலியுறுத்துகிறது. எனவே, இலங்கைக்கு சிறப்பு சுங்க வரிச் சலுகைகள் வழங்கும் போது இந்த அர்ப்பணிப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதில் அது நம்பிக்கை கொண்டுள்ளது. சர்வதேச வணிக சந்தையில் இலங்கை பெற்றுள்ள நற்பெயர் மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றுடன், பொறுப்பான முறையில் ஆடைகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இலங்கை நம்பகமான மற்றும் கவர்ச்சிகரமான இலக்கு என்பதில் JAAF உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது.
இரண்டு அரசாங்கங்களுக்கிடையே தொடரும் பேச்சுவார்த்தைகள் குறித்து JAAF நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது. வணிகத்தை விரிவுபடுத்தவும், மேலும் முதலீடுகளை ஈர்க்கவும், இரு தரப்பினருக்கும் வெற்றியைத் தரக்கூடிய எதிர்கால வணிக ஒப்பந்தத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இந்த மன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.