ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சயீது அப்பாஸ் அராச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ”இந்தியாவும், பாகிஸ்தானும் தமது சகோதர நாடுகள் எனவும், இரு நாடுகளுக்கு இடையேயும் நுாற்றாண்டு பழமையான கலாசாரம் மற்றும் நாகரிக உறவுகள் உள்ளதாகவும் , மற்ற நட்பு நாடுகளை போல அவர்களுக்கும் தாம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் தயாராக இருப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.