Date:

இனிய ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (31) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் வாசகர்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நியூஸ் தமிழ் இணைய தளம் மற்றும் மாஸ் மீடியா இன்டர்நெஷனல் (பிரைவட் லிமிடெட்) நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது.

நோன்புப் பெருநாளின் பயன்கள்!

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவாசிகள் இரண்டு நாட்கள் விளையாட்டில் ஈடுபட்டனர். ‘ஏன் இப்படிச் செய்கிறார்கள்?’ என்று நபியவர்கள் கேட்டபோது, அம்மக்கள், ‘நாங்கள் அறியாமைக் காலத்தில் இந்த இரண்டு நாட்களையும் பண்டிகை நாள் போல் விளையாடுவோம்’ என்று கூறினர். அதற்கு நபியவர்கள், ‘இவ்விரண்டு நாட்களுக்குப் பகரமாக உங்களுக்கு அவற்றை விடச் சிறப்பான இரண்டு நாட்களை இறைவன் தந்துள்ளான். அவை ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாள், ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள்’ என்று கூறினார்கள்.

மேற்கண்ட நபி மொழியில் வந்துள்ளது போன்று இஸ்லாத்தில் இரண்டு பெருநாள்கள் மட்டுமே உண்டு. நோன்புப் பெருநாள் புனித ரமழான் மாத நோன்பு நோற்ற பின்பும் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றொரு கடமையான ஹஜ்ஜின் போதும் கொண்டாடப்படுகின்றன. ரமழான் மாதத்தில் நாம் நோற்ற நோன்புகளில் ஏற்பட்ட குறைகளை நீக்குவதற்காகவும் பெருநாள் அன்று ஏழைகளும் மகிழ்ச்சியோடு நோன்புப் பெரு நாளைக் கொண்டாடவும் ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தின் இறுதிநாள் சூரியன் மறைந்தவுடன் நோன்புப் பெருநாள் தர்மம் கொடுப்பது கடமையாகிறது. இதை பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் கொடுத்துவிட வேண்டும். அதற்குப் பின்பு கொடுத்தால் அது சாதாரண தர்மமாகவே கருதப்படும். பெருநாளுக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பும் கொடுக்கலாம். (நோன்புப்) பெருநாள் அன்று காலையில் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றைப் படையாகப் பேரீச்சம் பழங்களை உண்பது நபி வழியாகும்.

தொழும் இடத்திற்கு நடந்து செல்வதும் நபி வழி ஆகும். ஆண்கள் நல்ல ஆடைகள் அணிந்து, நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும். தொழும் திடலுக்கு ஒருவழியில் சென்று வேறுவழியில் திரும்புவதும் நபி வழிதான். ஆண்களும் பெண்களும் குளித்து சுத்தமாகி அதிகாலையிலேயே தொழும் இடம் செல்ல வேண்டும். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று ஒருவழியில் சென்று மறுவழியில் திரும்பி வருவார்கள் என நபித் தோழர் ஜாபீர் (ரழி) அறிவிக்கிறார்கள்.

பெருநாள் மகிழ்ச்சிக்குரிய நாளாகும். நோன்பை நல்ல முறையில் நிறைவேற்றுவதற்கும் அந்த மாதத்தில் அதிகமதிமாக பிரார்த்தனைகளை, தொழுகைகளை நிறைவேற்றவும் அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். எனவே, அன்று மார்க்கம் அனுமதிக்கும் வகையில் மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்த வேண்டும். குடி, கும்மாளம், டான்ஸ், தவறான வீடியோக்கள், சினிமா போன்ற மார்க்கம் தடை செய்துள்ள வழிகளில் அந்த நாளைக் கழிக்கலாகாது. மாறாக சொந்த பந்தங்கள், நண்பர்கள், அண்டை வீட்டினரைச் சென்று சந்தித்து வாழ்த்து கூறுதல், நோயாளிகள் இருந்தால் அவர்களைச் சந்திக்கச் செல்லுதல் போன்ற நல்லறங்களில் ஈடுபடலாம். மார்க்கம் அனுமதிக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.

பெருநாட்களின் முக்கியமான நோக்கம் ஏகத்துவத்தை நிலைநிறுத்துவதாகும். அதனால்தான் பெருநாள் அன்று புத்தாடை உடுத்தி ‘இறைவன் மிகப் பெரியவன், இறைவன் மிகப் பெரியவன்’ (அல்லாஹு அக்பர்) என்று சொல்கிறோம். மேலும் தொழுகையில் ‘உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’ என்று கூறுகிறோம்.

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல் இரண்டாவது பயனாகும். நாம் பெருநாள் கொண்டாடுவதே அவர்கள் கூறிய வழிமுறைப்படி தான். எனவே அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் முஹம்மது இறைவனின் தூதர் என்னும் கலிமாவின் பொருளை உண்மைப்படுத்துகிறோம்.

மூன்றாவது பயன் நோன்புப் பெருநாள் தர்மம் வழங்குவது, அதனால் ஏழைகளும் அன்று மகிழ்வாகப் பெருநாள் கொண்டாட வழியேற்படுகிறது. சமுதாய ஒற்றுமை, மக்கள் நலனில் அக்கறை போன்ற பயன்களும் இதனால் ஏற்படுகின்றன. ஏழை, செல்வந்தன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என அனைவரும் ஓரிடத்தில சமமாக ஒன்று கூடுவதாலும் ஒருவரையொருவர் ஸலாம் கூறி வாழ்த்துவதாலும் அன்பும் சகோதரத்துவமும் பரிணமிக்கின்றன.

இறைத் தூதர் (ஸல்) கூறினார்கள். ‘என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாதவரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாய் ஆக முடியாது. ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாம் கூறுவதைப் பரவலாக்குங்கள்’.

பெருநாளின் போது சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தப்படும். அதன் மூலம் பெற்றோர்களைப் பேணுதல், உறவினருடன் சேர்ந்து வாழுதல், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருத்தல், அண்டை வீட்டாரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை, பெண்களுக்குத் தேவையான கணவன் – மனைவி உரிமைகளும் கடமைகளும் இறைவனுக்கு இணை வைத்தலின் தீங்குகள், மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும் அநாச்சாரங்கள், அவற்றின் தீங்குகள், மார்க்கம் தடை செய்துள்ள மது, விபச்சாரம், கொலை, திருட்டு, வட்டி, லஞ்சம், புறம்பேசுதல், கோள் சொல்லுதல், அவதூறு கூறுதல் போன்ற பல விஷயங்களின் தீங்குகள், அவற்றுக்குக் கிடைக்கும் இவ்வுலக மறுவுலகத் தண்டனைகள் குறித்து சொல்லப்படுவதால் மக்களுக்கு அவர்களது மார்க்கம் பற்றிய தெளிவு கிடைக்கிறது. இன்னும் இது போன்ற இறை நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் காரியங்களும் இறை நம்பிக்கைக்கு வலுவூட்டும் பல பயன்களும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   இதன் வலிமை ரிக்டர்...

முன்னாள் முதலமைச்சர் ஒருவருக்கு கடூழிய சிறை தண்டனை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட...

ஐ.தே.கட்சியின் உப தலைவராக மீண்டும் அகில விராஜ் காரியவசம் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில...

மினுவாங்கொடையில் துப்பாக்கி சூடு

மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள வீதித் தடை ஒன்றில் போதைப் பொருட்களை சோதனை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373