2024ஆம் ஆண்டுக்குள் 60,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நேற்று(15) இடம்பெற்ற நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மூன்றாம் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 40,000 வீடுகளும், நடுத்தர வகுப்பினர் மற்றும் பிற மட்டத்தினருக்கு 20,000 வீடுகளும் நிர்மாணிக்கப்பட உள்ளன.
100 நகர திட்டத்திற்கமைய, அந்த ஒவ்வொரு நகரிலும் 100 வீடுகள் என்ற அடிப்படையில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொழும்பில் மாத்திரமன்றி கிராமப் பகுதிகளிலும் இந்த வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.