கற்றாங்கு ஒழுகுக… என்ற வாக்கிற்கிணங்க இன்றைய தினம் வாழ்வில் முக்கிய அத்தியாயத்தை தொடங்க உள்ள சிறார்களது 2025 ஆம் ஆண்டுக்கான கால்கோள் விழா கொழும்பு 4 இல் அமைந்துள்ள் இந்துக்கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் கணபதிப்பிள்ளை நாகேந்திரா அவர்களின் தலைமையில் கல்லூரி ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச்சபை உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், தரம் 1ற்கு அனுமதி பெற்ற மாணவர்கள் என ஏராளமானவர்கள் பங்களித்தனர்.
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் ஆரம்ப பிரிவிற்கான உதவி பணிப்பாளர் திருமதி சகுந்தலா தேவி மனோகரன் கலந்து கொண்டிருந்ததுடன் மாணவர்களின் வளர்ச்சியையும் மாணவர்கள் பாடசாலையுடன் பேண வேண்டிய தொடர்புகளையும் எடுத்துரைத்தார்.
மேற்படி நிகழ்வில் தரம் 1ற்கு தெரிவாகியுள்ள மாணவர்களை வரவேற்கும் முகமாக தரம் இரண்டைச் சேர்ந்த மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் சிறப்பு நடனங்களையும் வழங்கினர்..
இதன்போது கல்லூரி அதிபர் உரையாற்றுகையில் தலைநகரில் சைவமும் தமிழும் தழைத்தோங்க கல்லூரியானது அரும்பாடு படுவதாகவும் அதற்கு மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கல்லூரியில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு மத்தியிலும் கல்லூரியானது கல்வி மற்றும் விளையாட்டுகளிலும் சிறப்பு பெற்று வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்..
இதனைத் தொடர்ந்து ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் அறிமுகத்தை ஆரம்ப பிரிவு ஆசிரியை திருமதி கலைவாணி நமசிவாயம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
தொடர்ந்து தரம் 1 மாணவர்களை வகுப்பறைகளுக்கு வகுப்பாசிரியர்கள் ஏற்றுக்கொள்ளுதல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.