அமைச்சரவையின் தீர்மானத்துக்கமைய, அரசாங்கத்தின் இரு நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்பட்ட 30, 000 மெட்ரிக் டன் சேதனப் பசளை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இம்முறை பெரும்போகத்துக்கு தேவையான சேதன பசளையை விநியோகிக்கும் வேலைத்திட்டம் இன்று (13) அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, இந்த நாடளாவிய வேலைத்திட்டத்துக்கமைவாகவே குறித்த சேதன பசளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த சேதனப் பசளை கிடைத்தவுடன், ஏனைய மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான சேதனப் பசளையை, பற்றாக்குறையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அண்மையில் விவசாய அமைச்சு அறிவித்திருந்தது.
சேதனப் பசளை பங்கீட்டின்போது, பெருமளவில் நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, குருணாகல், புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுாிமையளிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.