துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பால்மா தொகை இன்று(11) முதல், புதிய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதிநிதி லக்ஷ்மன் வீரசூரிய இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் புதிய விலை 1,195 ரூபாவாகும்.
அதேநேரம், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியின் புதிய விலை 480 ரூபாவாகும்.
இதேவேளை, சீமெந்து மற்றும் கோதுமைமா என்பவற்றின் புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளன.
50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர்.
குறித்த விலையை 100 ரூபாவினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்திருந்தார்.
இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 97 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 முதல் 12 ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.