கையூட்டல் ஆணைக்குழுவுக்கு பிரவேசித்த முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசன், வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குறித்த ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் உள்ள பிரபலங்கள், அரச தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளின் மறைமுக சொத்துகள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட பெண்டோரா ஆவணத்தில் திருக்குமரன் நடேசனின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தமை தொடர்பில் கையூட்டல் ஆணைக்குழு அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது.
இன்றுகாலை 9 மணியளவில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருகைதந்த நடேசன் சுமார் 4 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பெண்டோரா ஆவணத்தில் உள்ள இலங்கையர்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.
அதற்கமைய, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இன்று முன்னிலையாகி நடேசன் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
மேற்படி பெண்டோரா ஆவணத்தில் முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் நடேசன் ஆகியோருக்கு வெளிநாட்டில் மறைமுக சொத்துகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டு முன்னவைக்கப்பட்டுள்ளது.