
கொழும்பில் நேற்று நடைபெற்ற ‘தற்போதுள்ள கல்வி முறையை மாற்றுவதற்கு பொருத்தமான உத்திகளைத் தயாரித்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற செயலமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்களான, சிறுவயது மேம்பாடு முதல் உயர்கல்வி மற்றும் தொழில் பயிற்சி வரை கல்வித் துறையில் தேவையான சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு இந்த செயலமர்வு விவாதிக்கப்பட்டது.
“கல்வி என்பது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. அறிவைப் பெறுவதைத் தாண்டி, அது தனிமனித வளர்ச்சிக்கும், கூட்டுச் சமூக மாற்றத்திற்கும் வழிவகுக்க வேண்டும். இந்த மாற்றத்தை வளர்க்கும் திறன் கொண்ட கல்வி முறை நமக்குத் தேவை.
குழந்தைகள் உலகத்துடன் இணைவதற்கும் சமூகப் பொறுப்புணர்வு தன்மையை வளர்ப்பதற்கும் வாய்ப்புகள் இருக்க வேண்டும். சமூக முன்னேற்றத்துடன் தனிப்பட்ட வளர்ச்சியும் கைகோர்க்க வேண்டும்” என்று பிரதமர் கூறினார்.
கல்வி என்பது ஒரு பண்டம் அல்ல என்றும், அதை ஒரு பரிவர்த்தனை செயல்முறையாகக் கருதும் கலாச்சாரத்தையும் அவர் விமர்சித்தார்.
“ஒரு வாரத்தில் அல்லது இரண்டு வாரங்களில் முடிவுகளை எதிர்பார்க்கும் கல்வியில் நாங்கள் முதலீடு செய்யவில்லை – இது ஒரு நீண்ட கால முதலீடு. இந்த முதலீட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
கல்வி அமைச்சும் அதன் நிறுவனங்களும் கொள்கை முடிவுகளுக்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும். இந்தக் கொள்கைகள் மற்றும் முடிவுகள் தரவு சார்ந்ததாக இருக்க வேண்டும், தனிப்பட்ட கருத்துகள் அல்லது உணர்வுகளின் அடிப்படையில் அல்ல. துல்லியமான தரவைச் சேகரிக்கவும் பராமரிக்கவும் எங்களுக்கு ஒரு வலுவான அமைப்பு தேவை,” என்று அவர் மேலும் கூறினார்.