டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து சகலதுறை வீரர் மொயீன் அலி உடனடியாக ஓய்வை அறிவிக்கவுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் மாதங்களில் வீட்டை விட்டு பிரிந்து நீண்ட காலம் வெளிநாட்டில் இருக்க வேண்டி வரும் என்பதால் அவர் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவிவருகிறது. இருபது20 உலகக்கிண்ணம், அதன்பிறகு ஆஷஸ் தொடருக்காக அவர் செல்ல வேண்டியேற்படும்.
தற்போது, ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக மொயீன் அலி விளையாடிவருகிறார்.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வூட், டெஸ்ட் அணித் தலைவர் ஜோ ரூட் ஆகியோரிடம் தனது டெஸ்ட் ஓய்வு விடயத்தை அவர் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.
டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்துக்காக அவர் தொடர்ந்தும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதுவரை 64 டெஸ்ட்டில் விளையாடியுள்ள அவர் 2,914 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
இதில் 5 சதங்களும் 14 அரைசதங்களும் அடங்குகின்றன. அவர் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஓட்டமாக 155 ஓட்டங்களை எடுத்துள்ளதுடன், மொத்தமாக 195 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.