உத்தியோகபூர்வமற்ற சந்தை தயாரிப்புகள் நீண்ட காலமாக ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகின்றன. இது குறைந்த விலை மூலம் நுகர்வோரை கவர்ந்திழுக்கிறது.
ஆயினும், இதன் பின்புலத்தில், இந்த அங்கீகரிக்கப்படாத இறக்குமதிகள் மூலம் கணிப்பிட முடியாத பொருளாதார மற்றும் நுகர்வோர் தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
அவை தற்போது அதன் ஆரம்ப நிலையைக் கடந்து அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
வர்த்தக நாம முத்திரை கொண்ட உரிமையாளரின் அனுமதியின்றி, சந்தையில் பிரபலமான வர்த்தக நாமங்களின் தயாரிப்புகளின் இறக்குமதி மற்றும் விற்பனையே, உத்தியோகபூர்வமற்ற சந்தை தயாரிப்புகள் அல்லது ஒரே வகையான சமாந்தர இறக்குமதி உற்பத்திகள் என அழைக்கப்படுகின்றன.
ஏற்கனவே இந்த அங்கீகரிக்கப்படாத இறக்குமதிகள், பெருமளவிலான வரி வருமான இழப்பு மற்றும் அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 2023 ஆம் ஆண்டு அறிக்கைகளுக்கமைய, சட்டவிரோத வழிகள் மூலமான உத்தியோகபூர்வமற்ற சந்தை இறக்குமதி காரணமாக, இலங்கைக்கு ரூ. 3.1 பில்லியன் (9.4 மில்லியன் டொலர்) வரி வருமானம் மற்றும் ரூ. 31.6 பில்லியன் (96 மில்லியன் டொலர்) அந்நியச் செலாவணி இழப்பு இடம்பெற்றுள்ளது.
அது மாத்திரமன்றி, அசல் தயாரிப்புகளின் பொருட்களின் விலை அதிகம் என்பதால், இணையான இறக்குமதி தயாரிப்புகளின் வருகை காரணமாக, முறையான இறக்குமதி மூலம் கொண்டு வரப்படும் உற்பத்திகள் ரூ. 2.5 பில்லியன் இழப்பை சந்திக்க நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரகசியமாக இடம்பெறும் இந்த நடவடிக்கைகள் காரணமாக, இதன் உண்மையான பெறுமானத்தை சரியாக கணிப்பிட முடியாத போதிலும், இதன் தாக்கம் மறுக்க முடியாத அளவுக்கு கடுமையானது என்பதை மறுக்க முடியாது.
இந்நிலைமையானது, நாடு எதிர்நோக்கும் பொருளாதாரச் சவால்களை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
உத்தியோகபூர்வமற்ற சந்தை இறக்குமதிகள், வரி வருமான இழப்பிற்கு மேலதிகமாக, சட்டபூர்வ இறக்குமதிச் செயன்முறைகள் மற்றும் வரி விதிமுறைகளை கடைப்பிடிக்கும் முறையான வணிகங்களுக்கு சீரற்ற சந்தைத் தளத்தை உருவாக்குகின்றன.
உரிய கட்டணங்கள் மற்றும் வரிகளைச் செலுத்தாது செலவுகளைத் தவிர்த்து, உத்தியோகபூர்வமற்ற சந்தை செயற்பாட்டாளர்கள் வழங்கும் குறைந்த விலைகளுடன், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் போட்டியிட வேண்டியுள்ளது.
உத்தியோகபூர்வமற்ற சந்தையின் வளர்ச்சியானது, சட்டபூர்வமான இறக்குமதியாளர்களுக்கு ஒரு கடுமையான சவாலாக இருந்து வருகின்றது. இது முறையான இறக்குமதிகள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்களுக்கு இடையேயான விலை ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதாக, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இறக்குமதிப் பிரிவின் தலைவர் துலித மெண்டிஸ் தெரிவித்தார்.
சமீபத்தில் இடம்பெற்ற அதன் 89ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
உத்தியோகபூர்வமற்ற சந்தை இறக்குமதிகள் குறைந்த விலைகளில் பொருட்களை வழங்கிய போதிலும், அவை அவற்றுக்கே உரித்தான பிரச்சினைகளைக் கொண்டதாக வருகின்றன.
உத்தியோகபூர்வமற்ற வழிகள் மூலம் பெறப்படும் இத்தயாரிப்புகள் சரியான உத்தரவாதம், உதவி, விற்பனைக்குப் பின்னரான சேவை ஆகியவற்றைக் கொண்டிருக்காமல் இருக்கும்.
இதனால் இத்தயாரிப்புகளில் ஏற்படும் பிரச்சினை அல்லது பழுதுபார்ப்பு காரணமாக நுகர்வோருக்கு அதிக செலவு ஏற்படும் வாய்ப்பும் காணப்படுகின்றது. உற்பத்தி நிறுவனத்தின் உதவி வழங்கப்படாமல், குறைபாடுள்ள அல்லது தரமற்ற தயாரிப்புகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட உதவியையே நுகர்வோர் பெற நேரிடும்.
உத்தியோகபூர்வமற்ற சந்தை இறக்குமதியினால் ஏற்படும் சவால்களை இலங்கை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருவதால், இதற்கு பன்முக அணுகுமுறை அவசியமாகும் என்பது தெளிவாகிறது.
ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பை வலுப்படுத்துதல், நுகர்வோர் விழிப்புணர்வை அதிகரித்தல், சட்டபூர்வமான வணிகங்களுக்கு ஆதரவு வழங்குதல் ஆகியன பொருளாதார பாதிப்பைக் குறைப்பதற்கும் நாட்டின் நிதி ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் இதற்கான முக்கிய படிகளாகும்.
உத்தியோகபூர்வமற்ற சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும், அனைத்து இலங்கையர்களுக்குமான மிகவும் வலுவான மற்றும் சமமான பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் இங்கு முக்கியமானதாக காணப்படுகின்றன.
உத்தியோகபூர்வமற்ற சந்தைத் தயாரிப்புகள் நுகர்வோருக்கு குறுகிய கால நிதி நன்மைகளை வழங்கிய போதிலும், நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் அது ஏற்படுத்தும் நீண்ட கால விளைவுகள் பாரதூரமானவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.