ஆளுமை விருத்திக்கும் சமூகமயமாக்கலுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதனை அவதானிக்கலாம். ஒருவரின் ஆளுமை வளர்ச்சியில் சமூகமயமாதல் பெரிதும் தாக்கம் செலுத்தும். வாழும் சூழல் மற்றும் சமூகத்திற்கு ஏற்ற வகையில் வாழப் பழகிக் கொள்ளும் நெடுங்கால செயன்முறையை சமூகமயமாக்கல் என்று கூறப்படுகிறது. ஆளுமை விருத்தியில் சமூகமயமாக்கலின் வகிபங்கினைச் சரியாக அறிந்து கொள்வதற்கு முதவில் ஆளுமை என்ற எண்ணக்கருவினையும் சமூகமயமாக்கல் என்ற எண்ணக்கருவினையும் தனித்தனியே சுருக்கமாக நோக்குவோம்.
ஆளுமை என்ற எண்ணக்கரு மிகப்பரந்த கருத்தில் நோக்கப்பட வேண்டியதாகும். இதனை இலகுவில் வரைவிலக்கணம் செய்வது கடினம். ஆரம்பத்தில் ஒருவரின் தோற்றம், உருவம், அமைப்பு, பேச்சு, இயல்புகள் போன்ற வெளித்தோற்றங்களை ஆளுமை குறிப்பதாக சாதாரணமாக கருதப்பட்டது. விரிந்த நோக்கில் ஒருவருடைய மனப்பாங்கு, குணப்பண்புகள், நிறைவேற்ற முடியுமான, முடியாத செயல்கள், பிரச்சிளைகளை எதிர்கொள்ளும் விதம், நம்பிக்கை, விருப்பு, வெறுப்பு, வாழ்க்கை எதிர்பார்ப்புகள், சிந்தனைமுறை போன்ற பண்புகள் உள்ளடங்கிய ஒருவர் வெளிப்படுத்தும் நிலையானதும், உறுதியானதுமான நடத்தை அமைப்புக்கள் ஆளுமையாக கொள்ளப்படுகிறது.
தனியாளின் ஆளுமையை வளர்த்தெடுத்து அதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு இட்டுச் சென்று. சமூகமானது அழியாமல் பாதுகாக்கும் கருவியாக கல்வி உள்ளது. எனவே ஆளுமை ஒருவரின் அக புறத்தோற்றம், நடத்தை, செயற்பாடுகள், மனவெழுச்சி நிலைகள், எதிர்பார்புகள், ஆளிடைத் தொடர்புகள் போன்ற பலவேறு அம்சங்களுடனும் தொடர்புபட்டதாகும். ஆளுமையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக பரம்பரைக் காரணிகள், உடல் காரணிகள், சூழல் காரணிகள் போன்றன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆளுமையில் செல்வாக்குச் செலுத்தும் இக்காரணிகளில் சமூகமயமாதலுடன் தொடர்புடைய அம்சமே குழல் காரணியாகும். இதிலிருந்து ஆளுமை விருத்திக்கும் சமூகமயமாக்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம்.
சமூகமயமாக்கல் என்பது சமூக இசைவாக்கல் சமூகத்திற்கு உரித்தாக்கல். சமூகப் பொருத்தப்பாடடையச் செய்தல் முதலிய பல்வேறு பெயர்களால் அடையாளம் காணப்படுகின்றது. இதன்படி சமூக நிலமைக்கேற்றவாறு ஒருவர் பொருத்திக் கொள்ளல், ஒழுங்கமைத்துக் கொள்ளல், மாற்றியமைத்துக் கொள்ளல், இணங்கிக் கொள்ளல் முதலிய செயற்பாடுகளை சமூகமயமாக்கல் என்பது புலப்படுத்தும்.
மனித வாழ்வு என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட மனித வாழ்வியல் காலகட்டங்களைக் குறிக்கின்றது. இக்கால கட்டத்தில் மனிதன் குடும்பம், திருமணம், கல்வி, மதம், பட்டம், பதவி, செல்வம் மற்றும் அந்தஸ்து என்று பலவாழ்க்கைக் கோலங்களில் சங்கமிக்கின்றான். இவ்வாறு மனித வாழ்வு பல வாழ்க்கைக் கோலங்களைத் தாண்டிச் செல்லுகின்றது.
இவ்வாறான வாழ்க்கைக் கோலங்களில் ஒவ்வொரு மனிதன் தம் மனப்பாங்கு, நடத்தை, சிந்தனை, ரசனை, ஆசைகள் போன்றன வேறுபட்டுச் செல்வதனை அவதானிக்கலாம். இவ்வாறான வேறுபட்ட நடத்தைக் கோலங்கள் மானிடர்களிடையே காணப்படுவதற்கான காரணம் என்ன? என்ற சமூகவியலாளர்களின் வினாவிற்கு விடைகள் காணமுயன்ற வேளையில் தோன்றியதே சமூகமயமாக்கல் எனும் அம்சமாகும்.
எனவே தான் சமூகமயமாக்கல் என்பது ஒரு செயன்முறை எனவும், அது தனிநபரை அல்லது ஆளை மாற்றுகின்றது எனவும், தனிநபரை சமூகத்தின் அல்லது கலாச்சாரத்தின் அங்கம் ஆக்குகின்றது எனவும் குறிப்பிடப்படுகின்றது. சமூகமயமாதலை வரைவிலக்கணப்படுத்தும் போது ஒரு மனிதன் சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்கு தேவையான சமூக, சமய, கலாசார, பண்பாட்டு, ஒழுக்க சேவைகள் மற்றும் சமூக விழுமியங்கள் போன்ற விடயங்களைக் கற்றுத் தானும் ஒரு சமூக அங்கத்தவனாக வாழ்வதற்கு முயலும் செயன்முறை சமூகமயமாக்கல் என வரையறுக்கப்படுகின்றது.
ஒரு பரம்பரை இன்னொரு பரம்பரைக்கு அந்த சமூகத்தின் திறமைகளையும் மதிப்புக்களையும் வழங்குவது சமூகமயாக்கல ஆகும். அதாவது நனியாள் ஒருவர் தான் சார்ந்துள்ள சமூகத்தின் நடத்தைகள், பெறுமானங்கள் மற்றும் சிந்தனைகளைக் கற்கும் செயன்முறையாகும். தனியொருவர் சமூக நடத்தைகள் பற்றிய விளக்கத்தைப் பெறுதல், அவற்றிற்கு ஏற்ப பொருத்தப்பாட்டைதல் அல்லது அடையாதிருத்தல், அவற்றைத் தவிர்த்தல் அல்லது அவற்றோடு தாக்கமுறுதல் ஆகிய அத்தனை தொழிற்பாடுகளும் சமூகமயமாக்கலில் அடங்கும் என்பது சமூகக் கணிப்பீடுகளின் படி எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும்.
ஆளுமை விருத்தியில் சமுகமயமாக்கலின் வகிபங்கு ஆளுமை என்பது ஒருவரின் மனப்பாங்கு, குணப்பண்புகள், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதம், நம்பிக்கை, விருப்பு,வெறுப்பு, வாழ்கை எதிர்பார்ப்புகள். சிந்தனை முறை, நடைமுறைகள், பேச்சு, செயற்பாடுகள், நடத்தைகள் ஆகிய அனைத்தும் உள்ளடங்கியதாகும் இவ்வம்சங்களுடன் சமூகமயமாக்கல் நேரடியாகத் தொடர்புபடுவதைக் காணலாம். ஆளுமையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் குழல் காரணிகள் முக்கிய இடம் பெறுகின்றன. சூழல் காரணிகளில் உள்ளடங்கும் முக்கிய அம்சமாக சமூகமயமாக்கல் காணப்படுகிறது. இதிலிருந்து ஆளுமை விருத்தியில் சமூகமயமாக்கலின் செல்வாக்கும் வகிபங்கும் இடம் பிடித்திருப்பதைக் காணலாம்.
சமூகமயமாக்கல் செயன்முறை ஆளுமை விருத்தியில் மிகுந்த செல்வாக்குடையதாகும்.
சமூகப்பிராணியான மனிதன் சமூகமயமாக்கலுக்கு உட்பட்டு ஆளுமையை விருத்தி செய்ய வில்லையாயின் அவன் சமூகத்துடன் இணைந்து வாழ்வதில் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிவரும். சமூகமயமாக்கல் முகவர்களான குடும்பம், சமவயதுக் குழுக்கள், சகபாடிகள், பாடசாலை, கல்வி நிறுவனங்கள், கழகங்கள், ஊடகம், அரசியல் ஆகியவை ஆளுமைப் பண்புகளை உருவாக்குவதில் நேரடியாகத் தொடர்புபடுகின்றன.
பேச்சு ஆளுமையின் ஒரு அம்சமாகும். பேச்சுக்கான அடிப்படைகளை ஒருவன் சமூகமயமாக்கும் நிறுவனங்களில் ஒன்றாக குடும்பத்திலிருந்தே பெற்றுக் கொள்கிறான். அதிக எண்ணிக்கையான குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டுள்ள குடும்பத்திலுள்ள பிள்ளை மிக விரைவாக பேசக் கற்றுக் கொள்வதனை சிறந்த ஒரு உதாரணமாகக் கூறலாம். இந்தவகையில் குடும்பத்தின் தன்மை குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் பெருமளவு செவ்வாக்குச் செலுத்துவதைக் காணலாம்.
மனப்பாங்கு, குணப்பண்புகள், நம்பிக்கை, நடத்தைகள் போன்ற ஆளுமைப் பண்புகளின் உருவாகுவாக்கத்திலும் சமூகமயமாக்கல் பெரிதும் பங்கு வகிக்கிறது. குடும்பம், சமவயதுக் குழுக்கள், சகபாடிகள், பாடசாலை, தான் சார்ந்துள்ள சமூகம் என்பன இவற்றில் சமூகமயமாக்கலின் ஊடாக தாக்கம் செலுத்துகின்றன. உதாரணமாக மூட நம்பிக்கைகள் அதிகமுள்ள குடும்பத்திலுள்ள பிள்ளை அம்மூட நம்பிக்கைகளில் தானும் உறுதி கொள்ளும் நிலையைக் காணலாம்
சமவயதுக் குழுக்கள் சகபாடிகள் போன்றோரின் தாக்கமும் சமூகமயமாதலின் ஊடாக ஆளுமையில் செல்வாக்குச் செலுத்துவதைக் காணலாம் இக்குழுக்களினூடாக தலைமைத்துவம், தனது ஆற்றலை வெளிப்படுத்துதல், முன்னின்று செயற்படல், உணர்வுகளைப் பரீட்சித்தல் என்பனவற்றை இவர்கள் அடைந்து கொள்கின்றார். தலைமைத்துவம், ஆற்றலை வெளிப்படுத்தல், முன்னிற்றல் என்பன ஆளுமைப்பண்புகளில் முக்கியமாவையாகும்.
பிள்ளைகளை சமுகமயமாக்கல் செயன்முறைக்கு உட்படுத்தும் நிறுவனங்களில் முக்கியமானதாக பாடசாலை காணப்படுகிறது. ஒரு மனிதனுக்குத் தேiவான பல ஆளுமைப் பண்புகளை பாடசாலைகள் வளர்க்கின்றன. இவை சமூகத்தில் அவள் சிறந்து விளங்கவும் சரியாகச் செயற்படவும் உதவுகின்றன. உதாரணமாக கட்டுப்பாடுகள், நேரத்திற்குக் கருமமாற்றுதல், ஒழுங்குகள், விதிகளுக்கு உடன்பட்டு நடத்தல் முதியோரை மதித்தல், நற்செயல்களில் ஆர்வம் ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு பாடசாலைகள் வழிகாட்டுகின்றன. இவையனைத்தும் ஆளுமையுடன் தொடர்புபட்ட அச்சங்களாக இருப்பதால் சமூகமயமாதலின் பங்கு எந்தயை ஆளுமை வளர்ச்சியில் உள்ளதென்பதனைக் கண்டுகொள்ள முடிகிறது.
பாடசாலைகள் சமூகத்திற்குரிய கலாசாரங்களை ஊடுகடத்துகின்றன.
பாடசாலையில் மனித தொடர்புகள் சம்பந்தப்பட்ட சிக்கலான சடங்கு சம்பிரதயாங்கள் பழக்கவழக்க முறைகள் பாரம்பரியங்கள் அவற்றுடன் தொடர்புடைய ஒழுக்கவிதிகள் காணப்படுகின்றன. பாடசாலைகளைப் போன்றே தனியார் கல்வி நிறுவனங்கள், ஞாயிறு பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களும் சமூகமயமாக்கல் முகவர்களாக செயற்படுகின்றன. இங்கும் ஆளுமைப் பண்புகள் பல விருத்தி செய்யப்படுகின்றன.
ஒருவரின் மனப்பாங்கு, நம்பிக்கைகள் போன்ற ஆளுமைப் பண்புகளின் உருவாக்கத்தில் சமய நிறுவனங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒவ்வொரு சமயத்திற்கும் தனித்துவமான சமய வழிபாடுகள் கலை கலாசாரங்கள், நடைமுறைகள் என்பன உள்ளன. இவற்றை சமய நிறுவனங்களினூடாக அறிந்து கொள்வதுடன் சமயம் சார்ந்த கிரியைகள், நடத்தைகள் என்பனவற்றை கடைப்பிடிக்கவும் சமய நிறுவனங்களினூடாக கற்று கொள்கிறான்.
இன்றைய நவீன உலகில் சமூகமயமாக்கல் செயன்முறையை மேற்கொள்ளும் நிறுவனங்களில் ஊடகம் முக்கியமானதொன்றாகும். இதில் பத்திரிகைகள், நூல்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம், கையடக்கத் தொலைபேசிகள், படங்கள் போன்றவை உள்ளடங்குகின்றன. இவை இன்றைய உலகில் அதிகம் பாவிக்கப்படுபவை இவற்றின் மூலம் பிள்ளைகள் சமூகமயமாக்கலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உதாரணமாக ஊடகங்களில் தோன்றும் பிரபல்யமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பாடகர்கள், ஆட்சியாளர்கள் போன்றோரைப் பின்பற்றி அவர்களைப் போன்று உடையணிகின்ற தலைசீவுகின்ற நடத்தைக் கோலங்களை அமைத்துக் கொள்கின்றனர், நடத்தைக் கோலங்கள் ஒருவரின் ஆளுமையில் முக்கிய அம்சமாக இருப்பதனால் ஆளுமை விருத்தியில் சமூகமயமாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம்.
அரசியலும் ஒரு சமூகமயமாக்கல் கருவியாக கொள்ளப்படுவதுண்டு அரசியல் நிறுவளங்களான அரசியற் கட்சிகள், அமுக்கக்குழுக்கள், பாராளுமன்றம் போன்றனவும் சமூகமயமாக்கலை மேற்கொள்கின்றன. தலைமைத்துவப்பண்புகள், தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுதல் கூட்டாக செயற்படுதல், போன்ற பல்வேறு விடயங்களை அரசியல் நிறுவனங்களினுடாக மனிதர்கள் அடைத்து கொள்கின்றனர். இவையும் ஆளுமைப் பண்புகளாகவே கொள்ளப்படுவதால் ஆளுமையில் சமூகமயமாக்கலின் பங்கு அளப்பெரியது எனலாம்.
மனிதன் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்கும் தான் சார்ந்துள்ள சமூகத்தின் விழுமியங்கள், கலை, கலாசாரம், ஒழுங்குகள், கட்டுப்பாடுகள், நடைமுறைகள் என்பவைற்றை அறிந்து கடைப்பிடிப்பதற்கு சமூகமயமாக்கல் இன்றியமையாததாகும். இடத்திற்கும் குழலுக்கும் ஏற்றவகையில் நடந்து கொள்ளவும் இது அவசியமாகும். சமுகமயமாக்கலின் ஊடாகவே எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் யாருடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற விடயங்களை அறிந்து கொள்ள முடியும். ஆளுமை தேவைக்கேற்ப துலங்கலை ஏற்படுத்தல் என்ற அடிப்படையிலும் இதன் தாக்கம் உண்டு என்று கூறலாம்.
சமூகமயமாக்கலின் மூலமே மனிதனால் தனது சுயத்தை அறிந்து கொள்ள முடிகிறது. நான் யார்? தனக்குள்ள ஆற்றல்கள் என்ன? தனது விசேட திறமைகள் என்ள? என்பனவற்றை ஒரு மனிதனுக்கு சமூகமயமாக்கல் செயன்முறையே உணர்த்துகிறது. சுயத்தை உணர்ந்து செயற்படுவதும் ஆளுமையில் ஓர் அம்சமாகும். இந்தவகையிலும் இதன் வகிபங்கு முக்கியத்துவமுடையதாகும். செய்யக்கூடியவை எவை? செய்யக்கூடாதவை எவை? என்பனவற்றை அறிந்து கடைபிடிக்கவும் சமூகமயமாக்கல் அவசியமாகும். சமூகத்தில் தனக்குரிய அந்தஸ்த்தினையும் இடத்தினையும் அடைந்து கொள்ளவும் சமூகமயமாக்கல் அவசியமாகிறது. இவையனைத்தும் ஆளுமையுடன் தொடர்புடைய அம்சங்களாகும்.
பெற்றோர், ஆசிரியர்கள், பிள்ளைகளை வழி நடத்தும் ஏனையோர்கள் அனைவரும் சிறந்த முறையில் பிள்ளை சமூகமயமாக கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் பாடசாலைகளில் மாணவர்களுக்கு கிடைக்கின்ற பல அனுபவங்கள் அவர்களின் ஆளுமையின் செல்வாக்குச் செலுத்தி அவர்கள் சிறந்த ஆளுமையுடையவர்களாக மாறுவதற்கு உதவகின்றன. உதாரணமாக பாடசாலைகளில் மாணவ மன்றங்கள், கலை விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் சந்தர்ப்பத்தைப் பெறும் மாணவர்கள் பேச்சாற்றல், பாடும் நிறள், நடிக்கும் ஆற்றல், அறிவிப்புச் செய்யும் திறன் போன்ற பல்வேறு ஆளுமைத் திறன்களை விருத்தி செய்து கொள்வர். எனவே பாடசாலைகளில் மாணவர்களுக்கு ஆளுமை வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுப்பதுடன், அது எல்லா மாணவர்களுககும் கிடைப்பதனையும் உறுதி செய்ய வேண்டும்.
சமூகமயமாக்கல் சில வேளைகளில் எதிர் நடத்தைகளையும் தோற்றுவிக்கின்றன. சகபாடிகள், சமவயதுக் குழுக்கள், சமூக, குடும்ப அமைப்பு என்பன இதனைத் சில வேளைகளில் தோற்றுவிக்கின்றன இதனால் ஒருவரின் ஆளுமை குறைத்து மதிப்பிடப்படுவதுமுண்டு. மேலுள்ள விடயங்கள் அனைத்தையும் நோக்கும் போது சமூகமயமாக்கல் ஆளுமை வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிப்பதை அறிய முடிகிறது. இதற்கான சிறந்த சந்தர்ப்பங்களை பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது எமது பொறுப்பாகும்.
எம்.எப். எப். மாஹிரா
நான்காம் வருடம் முதலாம் அரையாண்டு,
சிறப்பு கற்கை மாணவி,
கல்வி, பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.