கலகொட அத்தே ஞானசார தேரர் பிணை வழங்கப்பட்ட போதும் வெலிக்கடை சிறைச்சாலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமையே இதற்கு காரணம் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கூரகல விகாரை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போது இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு மத நல்லிணக்கத்தை சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மேன்முறையீட்டு மனு விசாரணை செய்யப்பட்டு இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஞானச்சனசார தேரர் மீளாய்வு மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.
அந்த மனு மீது தீர்ப்பளித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்க நேற்று உத்தரவிட்டது.
இதன்படி, ஞானசார தேரரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரின் வெளிநாட்டுப் பயணத்தையும் தடை செய்து உத்தரவிட்டது.
மேலும் அவரது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.