உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உயிர்துறந்த திலீபனின் 34ஆவது நினைவேந்தலை முன்னிட்டு, அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டதாக கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து 11 நாட்களுக்கு பின்னர் உயிர்துறந்தார்.
இதையடுத்து, வருடாந்தம் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 11 நாட்கள் திலீபனின் நினைவேந்தல் வாரம் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய, நீதிமன்ற தடை உத்தரவை மீறி நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.