கம்பளை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளான்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்கொலை செய்துக்கொண்ட மாணவனின் தாய் ஆசிரியை என்பதுடன், தந்தை வனஜீவராசி திணைக்களத்தின் ஓய்வு பெற்ற அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது,
அத்துடன், மாணவனின் சகோதரன் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தாய் வேலை செல்ல தயாரான நிலையில், குறித்த மாணவனுக்கும் தாய்க்கும் இடையில் வாய்த்தர்க்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, குறித்த மாணவன் தனது அறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார்.
இந்த நிலையில், சிறிது நேரத்தின் பின்னர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மாணவன் உயிரிழந்த இடத்திலிருந்து கத்தி ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியிலேயே, மாணவன் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவன் வீடியோ விளையாட்டுக்கு அடிமையாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உயர் தர வகுப்பில் கணித பிரிவில் இந்த மாணவன் கல்வி பயின்று வந்துள்ளார்.
சாதாரண தர பரீட்சையில் 08 A சித்திகளையும், ஒரு B சித்தியையும் இந்த மாணவன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.