ரஷ்யாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி புட்டினின் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற்றது.
ஜனாதிபதி புட்டினின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு, புட்டின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு பாராளுமன்றத்தில் 3இல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் தேவைப்பட்டதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது.
அத்தோடு அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்தது, அவரது கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகளை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தது போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த தேர்தல் நடந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பமாகின.
இதுவரை எண்ணப்பட்ட 80 சதவீத வாக்குகளில் ஐக்கிய ரஷ்யா கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அத்தோடு மொத்தம் உள்ள 450 இடங்களில் 350-க்கும் அதிகமான இடங்களில் தங்கள் கட்சி வெற்றிப்பெற்றதாக ஐக்கிய ரஷ்யா கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.