அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸாவில் கடந்த 5ம் திகதி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கையிட்டுள்ள நிலையில் விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள மத்ரஸா ஒன்றில் கடந்த 05ஆம் திகதி இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த 13 வயதான எம்.எஸ். முஷ்அப் எனும் மாணவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை சட்ட வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்டது.
அதில் குறித்த மாணவனின் கழுத்து நெரிபட்டதால் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த மாணவன் குறித்து மத்ரஸாவில் இருந்து கிடைக்கப்பெற்ற தடயப்பொருட்களைக் கொண்டு பார்க்கும் பொழுது இது கொலையாக இருக்கலாம் என சாய்ந்தமருது பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, மரணமடைந்த மாணவனின் ஜனாஸா சம்மாந்துறை பகுதியில் மார்க்க கடமைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் பாதுகாப்பாக அவரது சொந்த ஊரான காத்தான்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாரத்ன குறித்த மத்ரஸா பாடசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
குறித்த மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் விசாரணை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
அத்துடன் மாணவனின் மரண விசாரணைக்காக சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மத்ரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையம் ஒன்றின் தடுப்பு காவலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இன்றையதினம் (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மத்ரஸாவின் சிசிடிவி கமரா வன்பொருள் மாயமான விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிசிடிவி கமராவின் சேமிப்பகம் வன்பொருள் மீட்கப்பட்டால் உண்மைகள் பல வெளியாகும் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.