இலங்கை மின்சார சபையின் பெண் அதிகாரி ஒருவருக்கு கொள்வனவு செய்யப்பட்ட 35 ஆயிரம் ரூபா பெறுமதியான செருப்பு மற்றும் 28 ஆயிரம் ரூபா பெறுமதியான பயணப் பை என்பவற்றுக்கு 63 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்தார்.
பிரான்சில் மூன்று நாட்கள் கல்வி சுற்றுலாவில் பங்கேற்பதற்காகவே இந்த அதிகாரிக்கு மேற்படி பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் வினவியபோது, இந்த கொடுப்பனவுகள் தொடர்பில் ஆராய சபையின் கணக்காய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அறிக்கையின் பின்னரே இவ்விடயம் தொடர்பில் உறுதியான அறிக்கையை வெளியிட முடியும் எனவும் சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தான் பயணத்தை முடித்துக்கொண்டு வருவதற்கு முன்னர் மேற்படி கொடுப்பனவை சம்பந்தப்பட்டவர்களுக்கு செலுத்துமாறு குறித்த பெண் அதிகாரி, நிதி முகாமையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி இலங்கை மின்சார சபையால் மேற்படி கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெண் அதிகாரி அடுத்த வருடம் ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு பயணப்பை, செருப்பு போன்றவற்றை வாங்க மின்சார சபையின் பணத்தை பயன்படுத்த முடியாது என ஊழியர்கள் கூறுகின்றனர்.