பாடசாலை மாணவர்களுக்கு பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை உட்கொள்ள கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபருக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) விசேட உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, பாடசாலை அதிபருக்கு கம்பளை கல்வி வலயத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
நாவலபிட்டி – ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபருக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் தரம் 11ல் கல்வி பயிலும் சில மாணவர்கள், மதிய உணவை பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை சுற்றி கொண்டு வந்துள்ளனர்.
இதனை அவதானித்த பாடசாலை அதிபர், குறித்த பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களையும் உட்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
பொலித்தீன் அற்ற சூழலை உருவாக்கும் கொள்கை கடைபிடிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு மாணவர்களுக்கு பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை உட்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை எதிர்கொண்ட இரண்டு பாடசாலை மாணவர்கள் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நாவலபிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தான் நேரடியாக அவதானம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் கூறுகின்றார்.
இந்த சம்பவத்தை எதிர்கொண்டதாக கூறப்படும் ஏனைய ஐந்து மாணவர்களும் இன்றைய தினம் பாடசாலைக்கு வருகைத் தந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.