மொழி அறிவை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது, ஏனைய மொழி அறிவையும் மாணத் தலைமுறைக்கு வழங்க வேண்டும் என்பதால் 2030 ஆம் ஆண்டாகும்போது அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(16) நடைபெற்ற, டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபகரும் தலைசிறந்த கல்வியலாளருமான மறைந்த ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பணம் இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு பிள்ளைக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சொத்துக்களை விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நாட்டு பிள்ளைகளின் உயர் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய பல்கலைக்கழங்களை ஆரம்பிக்கவிருப்பதாகவும், அதற்கு பங்களிப்பு வழங்கும் தனியார் துறையினருக்கு குறைவின்றி ஆதரவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் உறுதியளித்தார்.