கடனை மீளச் செலுத்துவது தொடர்பான இணக்கப்பாட்டை ஏற்படுத்துதல் மற்றும் கடனை மீளச் செலுத்துதல் ஆகிய இரு விடயங்களில் எதனை தேர்ந்தெடுத்தாலும் இந்த நாடு அடுத்த வருடம் இருள் நிறைந்த படுகுழியில் தள்ளப்படும் என்பது நிச்சியமாகும் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
குருநாகல் பிரதேசத்தில் நேற்று முன்தினம் (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுவரையில், வெளிநாட்டு கடன் தொடர்பில் அரசாங்கம் ஒரு இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. சீனாவுடன் இணக்கம் பெற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும் இதுவரையில் அவ்வாறு எந்த இணக்கமும் கிடைக்கவில்லை.
ஒருவேளை அந்த இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டால் பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்த நேரிடும். அதற்கமைய, தற்போது எமக்கு இருக்கும் வரையறுக்கப்பட்ட இருப்பை தொடர்ந்து இலக்க நேரிடும்.
மறுபுறம் கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் செம்பியா, கானா ஆகிய நாடுகளைப் போன்று அடுத்த வருடம் இருள் நிறைந்த படுகுழியில் தள்ளப்படுவோம். அதேபோன்று, லெபனான், கிறீஸ் போன்ற நாடுகளின் பாதையில் பயணிக்க நேரிடும்.
அதன் காரணமாக இந்த இரு விடயங்களில் எது இடம்பெற்றாலும் அடுத்த வருடம் நெருக்கடி நிலைமை நிச்சயம். கடனை மீளச் செலுத்த ஆரம்பித்தாலும் சிக்கலை சந்திக்க நேரிடும்.
கடன் மீளச் செலுத்துவது தொடர்பில் ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வராவிட்டாலும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். இதுவே எமது நாட்டின் எதிர்கால நிலைமையாகும்.
இந்த பாராதூர நிலைமை தொடர்பில் சிந்திக்காமல், உலக வங்கியும் எமக்கு நிவாரணங்களை வழங்குவதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் எமக்கு உதவிக் கரங்களை வழங்கி வருவதாகவும் கூறி கொண்டு முன்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம் என்றார்.