காசாவில் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அடுத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான சிரியா மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்துள்ளன. இதில் 8 இராணுவத்தினர் இறந்துள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் சிரிய ராணுவத்தின் 5ஆவது பிரிவின் தலைமையக கட்டடமும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா பகுதியிலிருந்து நேற்று இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் போர் காசாவை தாண்டி பரவும் என்ற அச்சங்கள் உள்ள நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் லெபனான், சிரியாவில் நடக்கும் தாக்குதல்கள் பார்க்கப்படுகின்றன.
இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் நிலையில் அதற்கு எதிரான அமைப்பின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். லெபனானின் பெய்ரூட்டில் நடந்த இச்சந்திப்பில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா, ஹமாஸ் துணைத்தலைவர் சலே அல் அரவுரி, பாலஸ்தீன ஜிகாத் தலைவர் ஜியாத் அல் நகாலா ஆகியோர் இப்பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக போர்க்கப்பல்களை தொடர்ந்து அதிநவீன F 16 விமானங்களையும் அமெரிக்கா தற்போது அனுப்பியுள்ளது.