மின்சார கட்டண அதிகரிப்பு மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத சுமை என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றாலும் குறுகிய காலத்துக்காவது இதனை தாங்கிக்கொள்ளாவிட்டால் மீண்டும் வரிசை நிலைமைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வங்குரோத்து அடைந்திருக்கும் நாட்டை அதில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் அனுபவம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் இருக்கும் தொடர்புகள் மூலம் பொருளாதார நெருக்கடியை போக்கிக்கொள்ள உதவிகளை பெற்று வருகிறார்.