2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி அன்று கொழும்பு ஷங்கரிலா ஹோட்டலில் பாகிஸ்தானின் 58 வது பாதுகாப்பு தினத்தை கொண்டாடும் வகையில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் வரவேற்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு நிலை ) ஜிடிஎச் கமல் குணரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
1965 இல் தாய்நாட்டைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் தியாகங்களை பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர், கர்னல் முஹம்மது ஃபரூக் புக்டி சுட்டிக்காட்டியதோடு பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் ஆயுதப்படைகளின் பங்கையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் ஃபரூக் பர்கி வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு செப்டம்பர் 6 , பாகிஸ்தானின் பாதுகாப்பு தினம் பாகிஸ்தான் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது, ஏனெனில் 1965 ஆம் ஆண்டு இந்த நாளில்தான், வீரம் மிக்க ஆயுதப்படைகளும் ஒட்டுமொத்த தேசமும் ஒன்றிணைந்து எதிரிகளை முறியடித்தன என்றும் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் ஆயுதப் படைகளின் வீரம் நிறைந்த ஆண்,பெண் தியாகிகள் (ஷுஹாதா) மற்றும் போராளிகளுக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தினார்.
பாகிஸ்தான்-இலங்கை நட்புறவு சம்பந்தமாக கருத்துத்தெரிவித்த உயர்ஸ்தானிகர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும், களங்களிலும் வலுப்பெற்றுள்ளன என்பதை எடுத்துரைத்தார்.
படங்கள்: எ.நசார்