புத்தளம் – தப்போவ சரணாலயத்தில் தீப்பரவல் இடம்பெற்றுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீப்பரவலானது தப்போவ 10ம் கட்டைப் பகுதியில் நேற்று (22.08.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த தீப்பரவலில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகிறது
காட்டுத்தீ பரவியுள்ளதாக அப்பகுதி மக்கள் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
எனினும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.