வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டதில் தம்பதியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் 23 ஆம் திகதி வவுனியா தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் விழாவின் போது வீட்டுக்குள் நுழைந்த 8 பேர் கொண்ட குழு அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி வீட்டிற்கு தீ வைத்து எரித்ததாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது வீட்டில் இருந்த 10 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் கணவன் மனைவியும் உயிரிழந்தனர்.
பின்னர் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை, வவுனியா பொலிஸார் மற்றும் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 03 மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபர்கள் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைப் புலனாய்வுப் பிரிவினரால் 48 மணிநேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒப்பந்த அடிப்படையில் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி நேற்று பிற்பகல் வவுனியா வைரவ புளியங்குளம் குளத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சில வாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு அந்தப் பகுதியில் உள்ள திருமணமான பெண் கிராம அதிகாரி ஒருவருடன் தொடர்பு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விசாரணையில், கிராம அதிகாரிக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு திருமணமான நபருடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்ட இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அதில் ஒருவரால் இந்த கொலையை செய்ய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW