‘ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்’ ஜூலை 30ஆம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அத்தினத்தை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை (27) எதுல்கோட்டையில் சேப் பவுண்டேஷனால் (Safe Foundation) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் சேப் பவுண்டேஷன் திட்ட முகாமையாளர் சரண்யா கயேந்திரன் மற்றும் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது, ‘மனித வியாபாரம்! பாரதூரமான கொலைக் குற்றம்’ என்ற தொனிப்பொருளில் நினைவுகூரப்படும் ‘ஆட்கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்’ எதிர்வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை பத்தரமுல்லையில் அமைந்துள்ள வாட்டர்ஸ் எட்ஜ் (Waters Edge) ஹோட்டலில் நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டது.
யுனைட் எகைன்ஸ்ட் ட்ரபிக்கிங் (Unite Against Trafficking) சிவில் சமூக நிறுவனங்களின் கூட்டமைப்புடன் சேப் பவுண்டேஷன் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
‘மனித கடத்தலால் பாதிக்கப்படும் ஒவ்வொரு நபரையும் சென்றடைவோம், ஒருவரையும் கைவிடமாட்டோம்’ என்ற ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட கருப்பொருளுக்கு இணையாக ‘பாதுகாப்பாக இருங்கள்’ (Be Safe) என இந்நிகழ்வின் கருப்பொருள் அமைந்துள்ளது.
மனிதக் கடத்தலை ஏற்படுத்தும் காரணிகள் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல், அக்கறை கொண்ட தரப்புகளிடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவித்தல், மனிதக் கடத்தலுக்கு எதிராக கடுமையான கொள்கைகள் மற்றும் சட்டங்கள் வகுக்கப்படுவதை ஆதரித்து வாதிடல், பாதிக்கப்பட்டவர்களுக்கான எதிர்வினை மற்றும் ஆதரவு முறைமைகளை மேம்படுத்தல், பாதிப்புறும் ஏதுநிலையினை குறைப்பதற்காக திறன் விருத்தியை ஊக்குவித்தல், பல்வகைத்தன்மை மிக்க பிரச்சாரங்கள் ஊடாக இவ்விடயம் சமூகத்தை சென்றடைவதை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பாதிப்புறும் நிலையில் காணப்படும் அனைத்து தனி நபர்களையும் சுரண்டலின் தீங்கிலிருந்து பாதுகாக்கும் கடப்பாட்டையும் இந்நிகழ்வின் கருப்பொருள் வலியுறுத்துவதாக இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW