இலங்கை அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான லங்கா சதொசவை மறுசீரமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (11) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தீர்மானத்தை அறிவித்தார்.
லங்கா சதொச நிறுவனம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்காத காரணத்தினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.
இதனடிப்படையில், சதொச நிறுவனத்தை மறுசீரமைப்பது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, வழிகாட்டல் மற்றும் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க வேண்டும்.
இதற்காக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர், நளின் பெர்னாண்டோவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.