நல்லாட்சிக் காலத்தில் அநீதிகளுக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு உரிய நீதியை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவர்கள் விலக முடியாது என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம். எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
கிண்ணியாவில் உள்ள திருகோணமலை மீடியா போர இல்லத்தில் இன்று(16) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
ரணில் விக்ரமசிங்க அவர்கள் மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிம் சமூகம் நல்லாட்சி அரசை ஏற்படுத்துவதற்காக அதிகப்படியான வாக்குகளை அளித்து வெற்றிக்காக மாபெரும் பங்களிப்புகளை செய்திருந்தனர்.
அதன் காரணமாக ஆத்திரமடைந்த சிலர் அரசியல் இலாபங்களுக்காக இனவாதம், மதவாதம், அடிப்படை வாதம் போன்ற பதங்களை கையில் எடுத்து அநியாயமாக முஸ்லிம்கள் மீதும் முஸ்லீம்களின் சொத்துக்கள் மீதும் பல்வேறு தாக்குதல்களை திட்டமிட்டு அரங்கேற்றினர்.
அதன் அடிப்படையில் அம்பாறை, கண்டி திகன, அழுத்கம, மினுவாங்கொட போன்ற பல பிரதேசங்களில் காணப்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வாகனங்கள், பள்ளிகள் என பல்லாயிரம் கோடி பெறுமதியான சொத்துக்களும் உயிர்களும் அடாத்தாக அழிக்கப் பட்டன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சம்மந்தமே இல்லாது அநியாயமாக முஸ்லீம்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டது மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும், கல்விமான்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார்கள்.
ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் நல்லாட்சிக்கும் ஆதரவு வழங்கியதற்காக வேண்டுமென்று தண்டிக்கப்பட்ட இந்த முஸ்லிம் சமூகத்திற்கு பொருத்தமான தீர்வை பெற்றுத் தரவேண்டிய பொறுப்பு கூறலில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் விலக முடியாது.
எனவே
01) பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு உரிய நீதியை பெற்றுத் தர வேண்டும்.
02) பொருத்தமான நட்ட ஈடுகளை வழங்க வேண்டும்.
03) சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடாத்திய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
04) உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்த வேண்டும்.
05) அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அப்பாவி முஸ்லிம் சமூகம் விடுதலை செய்யப்பட வேண்டும்.
06) எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான துர்பாக்கிய சம்பவங்கள் நடைபெறாததை உறுதிப்படுத்துவதோடு முஸ்லீம்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
எனும் ஆறு கோரிக்கைகளையும் அவர் முன் வைத்துள்ளார்.
திருகோணமலை நிருபர்- ஹஸ்பர்