கடந்த செய்வாய்கிழமை வவுனியாவில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தின் உடற்கூறாய்வு முடிவுகள் வௌியாகியுள்ளது.
அதில் குழந்தைகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது – 42), வரதராயினி (வயது – 36), மைத்ரா (வயது – 09), கேசரா (வயது – 03) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
குடும்பத் தலைவரான கௌசிகனின் சடலம் வீட்டின் விறாந்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதுடன், அவரது மனைவி, பிள்ளைகள் படுக்கையில் தூங்கும் நிலையில் போர்வையால் நன்கு போர்த்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கௌசிகனின் சடலத்தில் வேறு எந்தத் தடயங்களோ, காயங்களோ இல்லாத காரணத்தால் அவரது மரணம் தூக்கில் தொங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தைகளினதும் தாயாரான வரதராயினியின் இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், அவரதும், கணவனான கௌசிகனதும் உடல் உறுப்பு மாதிரிகளும் குருதி மற்றும் சிறுநீர் மாதிரிகளும் மேலதிக ஆய்வுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.