Alt News என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஊடகவியலாளர் முகமது ஜுபைருக்கு எதிராக தவறான ட்வீட் பதிவிட்டதாகக் கூறப்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா என்று டெல்லி பொலிஸாரிடம் டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குறித்த வழங்கு விசாரணையின் போதே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பதிவிட்ட ட்வீட் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டார்.
மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், பகைமையை ஊக்குவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, AltNews என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் டெல்லி பொலிஸாரால் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார்.
முகமது ஜுபைர் மார்ச் 2018 இல் ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளை வேண்டுமென்றே அவமதிக்கும்” ஒரு “கேள்விக்குரிய” படத்தை ட்வீட் செய்ததாகக் குற்றம் சாட்டி பாலாஜி என்பவர் டெல்லி பொலிஸில் புகார் அளித்தார். இதையடுத்து முகமது ஜுபைரை கைது செய்தனர் டெல்லி பொலிஸார்.
Alt News இன் இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா “ஜுபைர் 2020 முதல் வேறு ஒரு வழக்கில் விசாரணைக்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அதில் நீதிமன்றம் அவரை கைது செய்யாமல் பாதுகாப்பை வழங்கியது. ஆனால் அதற்கு பதிலாக இந்த புதிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். பலமுறை கோரிக்கை விடுத்தும் எஃப்.ஐ.ஆர் நகல் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு, பாஜக அரசை விமர்சித்துள்ளார். “உண்மையின் ஒரு குரலைக் கைது செய்வது இன்னும் ஆயிரம் குரல்களை எழுப்பும்,” என்று அவர் கூறியிருந்தார்.
காங்கிரஸ் எம்பி சசி தரூர், ஜுபைரின் கைது “உண்மையின் மீதான தாக்குதல்” என்று குறிப்பிட்டு, அவரை விடுவிக்கக் கோரினார். மற்றொரு காங்கிரஸ் எம்.பி., ஜெய்ராம் ரமேஷ், அரசின் போலியான கூற்றுக்களை AltNews அம்பலப்படுத்தியதால், டெல்லி பொலிஸார் பழிவாங்கும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார்.