குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக்கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு 2,850,000 அரிசி பெற்றுக்கொடுப்பதற்காக ஆக கூடியது 20 பில்லியன் ரூபாவுக்காயினும் போதுமானளவு நெல்லை கொள்வனவு செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நெல் கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பொறிமுறை ஒன்றினூடாக அதனை குறைந்த வருமானம் பெறுவோருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உணவு பாதுகாப்பு வேலைதிட்டத்தின் கீழ் 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசியைப் பெற்றுக்கொடுப்பதற்காக 20 பில்லியன் ரூபா பெறுமதியான நெல் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.