வடமேற்கு சிரியாவில், நிலநடுக்கத்தில் சிதைந்த கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கிய கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையை மீட்கும்போது, அந்தப் பெண் குழந்தை தன் தாயுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்பட்டே இருந்திருக்கிறாள்.
ஆனால், அவளது தாய், தந்தை மற்றும் நான்கு சகோதர சகோதரிகளும் உயிருடன் மீட்கப்படவில்லை.
இதனிடைய குறித்த குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் முன்வந்துள்ளனர்.
இடிபாடுகளின் நடுவே இருந்து தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு அயா (Aya) என பெயரிடப்பட்டுள்ளது. அரபி மொழியில் அயா என்றால் அற்புதம் என்று பொருளாம்.
சட்டம் அனுமதித்தால் அயாவைத் தத்தெடுத்து மகளாக வளர்க்கத் தயார் என பல நாட்டவர்கள் கூறியிருக்கும் நிலையில், அயாவை தற்போது கவனித்துக்கொள்ளும் வைத்தியர் மஹ்ரூப், அயாவை இப்போதைக்கு யாருக்கும் தத்துக்கொடுக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். அவளது தூரத்து உறவினர்கள் வரும்வரை அயாவை என் சொந்தப் பிள்ளை போலவே பார்த்துக்கொள்ளப்போகிறேன் என்கிறார் அவர்.
வைத்தியர் மஹ்ரூக்கும் ஒரு சிறு குழந்தை இருக்கிறது. அயாவைவிட அவள் நான்கு மாதங்கள்தான் பெரியவள். ஆகவே, வைத்தியர் மஹ்ரூபின் மனைவி, தன் மகளுடன் கூடவே அயாவுக்கும் தாய்ப்பாலூட்டி அவளையும் தன் மகள் போலவே கவனித்துக்கொள்கிறார்.