அங்குலானை பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரை விடுதலை செய்துக்கொள்வதற்காக, அவர்களது உறவினர்கள் என கூறப்படும் சிலர் பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அமைதியின்மையை தோற்று வித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, உறவினர்கள் என கூறப்படும் நபர்களுடன், சந்தேகநபர்கள், பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும், இவ்வாறு தப்பிச் சென்ற சந்தேகநபர்கள், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கையடக்கத் தொலைபேசி ஒன்று தொடர்பில் எழுந்த பிரச்சினை ஒன்று காரணமாக, இருவரும் அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இவ்வாறு பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தந்த இருவரையும் பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்த நிலையிலேயே, உறவினர்கள் என கூறிக் கொள்ளும் சிலர் அமைதியின்மையை தோற்றுவித்துள்ளனர்.
அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த நிலையில், பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பொலிஸ் அதிகாரி, தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, பல பொலிஸ் நிலையங்களிலுள்ள அதிகாரிகள், அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.