மருத்துவர்களுக்கு மட்டும் 60 வயதுக்கு மேல் பணிபுரியும் வாய்ப்பு வழங்கினால், சுகாதாரத் தொழிற்சங்கங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார்.
பொரளை சங்க கேட்போர் கூடத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நீதி கிடைக்காவிடின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடுவதற்கு தமது சங்கம் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஓய்வுபெறும் வயதை நீட்டித்து நீண்ட காலம் பணிபுரிய அனுமதி வழங்குவது ஒரு சிறப்புச் சலுகையே தவிர, சேவைத் தேவையல்ல என்றார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவ அதிகாரிகள் அல்லாத ஏனைய சுகாதார நிபுணர்கள் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பணிந்துள்ளதாகவும், சுகாதார சேவையில் ஒரு தொழிலை மாத்திரம் பாரபட்சம் காட்டுவது நியாயமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் மருத்துவ நிபுணத்துவ அதிகாரிகள் என பெரும் எண்ணிக்கையிலான வைத்திய நிருவாக உத்தியோகத்தர்களும் இந்த அதியுயர் பாக்கியத்தை அனுபவிக்க தயாராக இருப்பதாகவும் அதன் காரணமாக சுகாதார சேவையின் வினைத்திறனை விருத்தி செய்யும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது ஒரு சேவைத் தேவையல்ல என்றும், சுகாதார அமைச்சு இது தொடர்பான சரியான தகவல்களை வெளியிடாமல் நாட்டை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.