புடவைக்கு பதிலாக இலகுவான மாற்று ஆடைகளை அணிந்து, ஆசிரியைகள் கடமைகளுக்கு வருகைத் தர முடியாத வகையில், விசேட சுற்று நிரூபமொன்றை இன்றைய தினம் (நவ.23) வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாக அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
நாட்டிலுள்ள சில பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியைகள், புடவைக்கு பதிலாக இலகுவாக மாற்று ஆடைகளை அணிந்து, கடமைகளுக்கு சமூகமளிப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஆசிரியைகள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் போது புடவைகளில் வருகைத் தர வேண்டும் என கல்வி அமைச்சு கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எட்டியுள்ளமையினால், அந்த தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் கிடையாது எனவும்; அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து அரச நிறுவனங்களிலும் கடமையாற்றும் ஆசிரியைகள், தமக்கு இலகுவான ஆடைகளை அணிந்து கடமைகளுக்கு சமூகமளிக்க Nவுண்டும் என வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில், தன்னிச்சையாக ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் பட்சத்தில், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.