நீதி ஒருபோதும் சாகாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று (02) உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் எம்.பி. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து தான் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் ரிஷாத் பதியுதீன் எம்.பி. தெரிவித்ததாவது:-
“அரசியல் ரீதியில் என்னைப் பழிவாங்கும் வகையில் ராஜபக்ச கும்பல் பல நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அதில் பிரதானமானதே என் மீதான உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கு.
அந்தச் சம்பவத்துடன் என்னைத் தொடர்புபடுத்தி – பொய்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருந்தது ராஜபக்ச அரசு.
அதுமட்டுமன்றி சந்தேகநபராக என்னைப் பெயரிட்டு என்னை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து சிறையிலும் அந்த அரசு அடைத்திருந்தது. பின்னர் பிணையில் என்னை நீதிமன்றம் விடுவித்திருந்தது.
தற்போது உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கிலிருந்து எனக்கு முழுமையான விடுதலை கிடைத்துள்ளது. ராஜபக்சக்களின் பழிவாங்கலில் இருந்து மீண்டு விட்டேன். நீதி ஒருபோதும் சாகாது” – என்றார்.