தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு கைது செய்துள்ளது.
இளைஞர், யுவதிகளை தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்புவதாக தெரிவித்து, குருநாகல் நகரின் பிரதான இடமொன்றில் இந்த நபர்கள் பண சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காக நபரொருவரிடமிருந்து முற்பணமாக 1500 ரூபாவை இந்த நபர்கள் அறவிட்டு வந்துள்ளனர்.
இதன்படி, குறித்த இடத்திலிருந்து 77000 ரூபா பணம் மற்றும் மேலும் சில பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, இரண்டு லட்சம் ரூபா வீதமான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.