நாட்டையும் மக்களையும் , அரசியல் புரட்சிக்கு காரணமாகக் காணப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களையும் காட்டிக் கொடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் இந்த அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள். அன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு துரோகமிழைக்கக் கூடாது என்பதற்காக பிரதமர் பதவியை நிராகரித்ததைப் போன்றே, இன்று நாட்டு மக்களுக்காக இந்த அரசாங்கத்துடன் இணையாமலிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொலன்னாவ தொகுதி கூட்டம் நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இம்முறை கூட்டத்தொடரில் சிவில் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு முக்கியத்துவமளிப்பதைப் போன்று பொருளாதார உரிமைகளுக்கும் முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமானதொரு விடயமாகும். சமூகத்தில் பொருளாதார உரிமைகளும் மக்களின் உயிர் வாழக் கூடிய உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவும் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுமே நாடு இந்தளவு வீழ்ச்சியடையக் காரணம் என்பதை இலங்கையைப் போன்றே சர்வதேசமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தாம் எந்த தவறும் செய்யவில்லை எனில் , போராடும் மக்கள் மத்தியில் சென்று அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறியும் தைரியம் காணப்பட வேண்டும். ஆனால் இன்று எவருக்கும் அந்த தைரியம் இல்லை.
ராஜபப்க்ஷ அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவின 134 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று , அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் வெகுவிரைவில் உள்ளுராட்சி தேர்தல் இடம்பெறவுள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் மக்களைக் காட்டிக் கொடுக்காத , நேர்மையாக செயற்படும் உறுப்பினர்களுக்கு மாத்திரமே ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றார்.