பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று (19) இடம்பெறவுள்ளது.
26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டபோது, 1952ஆம் ஆண்டு அவர் பிரித்தானிய மகாராணியாக மகுடம் சூடினார்.
எலிசபெத் மகாராணி ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் விடுமுறையை கழித்து வந்த நிலையில், கடந்த 8 ஆம் திகதி 96 ஆவது வயதில் திடீரென மரணம் அடைந்தார்.
மகாராணியின் மறைவையடுத்து அவரது மூத்த மகன் சார்ள்ஸ் (73) அந்த நாட்டின் மன்னரானார்.
மகாராணியின் உடல் பால்மோரல் கோட்டையில் இருந்து, ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பரோவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், லண்டன் எடுத்துசெல்லப்பட்டது.
அங்கு பக்கிங்ஹாம் அரண்மனையில் வைக்கப்பட்டு அரச குடும்பத்தினரும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 14 ஆம் திகதி மாலை முதல் மகாராணியின் உடல் அடங்கிய பேழை, லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அதன் மீது கிரீடமும், செங்கோலும் வைக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அங்கு தொடர்ந்து 4 நாட்களாக பொதுமக்கள் அலையெனத் திரண்டு வந்து, கடும் குளிரிலும் இரவு பகலாக வரிசையில் காத்து நின்று, மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தையொட்டி அமைந்துள்ள லேன்காஸ்டர் இல்லத்தில் மகா ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பதற்கான அஞ்சலிப் புத்தகம் வைக்கப்பட்டு, அதில் தலைவர்கள் இரங்கல் குறிப்புகளை எழுதி வருகின்றனர்.
மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மகாராணியின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறுகின்றது.